கீதாமுகூர்த்தம் என்பது என்ன? என்னுடைய அனுபவத்திலிருந்து அதை இவ்வாறு விளக்கிக் கூறுகிறேன். நம்முடைய அனுபவ அறிவும் தர்க்க புத்தியும் அவற்றின் உச்சநிலைகளில் சிக்கி முன்னகரமுடியாமல் திகைத்து நிற்கும் தருணத்தில் நாம் உணரக்கூடிய ஒரு நிலை அது. அறிந்து விடலாம் என்ற நம் ஆணவம் ஆட்டம் கண்டு போகும் நேரத்தில் நாம் உணரும் ஒரு நிலை .
நான் அதிகமும் உரையாடி அறிந்து கொண்ட வரை, இது எதிர்பாராத மரணங்கள் மூலமே அதிகமும் மனிதர்களுக்கு நிகழ்கிறது. மகாபாரதத்தில் யட்சன் தருமரிடம் உலகின் மாபெரும் வேடிக்கை எது என்று கேட்க, ‘கணந்தோறும் மானுடர் சாகக்கண்டும் வாழ்வு நிலையானது என்று எண்ணும் மனிதப் பேதமைதான்’ என்று அவர் பதில் கூறுகிறார். கல்விக்கடல் நீந்தியவர்கள், வாழ்வின் உச்சியில் கொடி ஏற்றியவர்கள் மரணம் அளித்த அடியைத் தாங்காமல் சுருண்டு விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன்.
மரணத்திற்கு நிகரானது எதிர்பாராத மாபெரும் வீழ்ச்சி. வியாபாரத்தில், அதிகாரத்தில், குடும்பத்தில் நிகழும் சரிவு. ஒரு வெற்றி நம்மை அடையும்போது நாம் அதற்கு படிப்படியாக ஒரு தர்க்க அமைப்பை கற்பனை செய்துகொள்கிறோம். இதனால்தான் இப்படி என்று விளக்குகிறோம். சரிவை அப்படி விளக்க முடிவதில்லை. பெரும் சரிவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் மனம் பேதலித்த பலரை நான் கண்டிருக்கிறேன்.
இவ்விரண்டுக்கும் இணையானது உறவுகளின் சிக்கல்கள், புதிர்கள். நம்பிக்கைத் துரோகங்கள், பிரிவுகள், மனவேறுபாடுகள் என உறவுகள் அளிக்கும் அடிகளுக்கு முடிவேயில்லை. அவமானத்தின் மலைகளை நம் மீது ஏற்றி வைத்துவிட்டுப் போகும் உறவுகள் உண்டு. அவற்றை விடக் குரூரமானவை எந்தக் கோணத்தில் யோசித்தாலும் நம் மூளைக்குப் பிடிபடாத உறவுச்சிக்கல்கள். தேடித்தேடி மூளை சலிக்க, மனம் எரிய, அந்த முடிவிலாத் துயரத்திலிருந்து மீள முடியாமல் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஓடிப்போகிறார்கள், பைத்தியம் அடைகிறார்கள்.
இலக்கிய வாசகர்களுக்குத் தெரியும், உலகில் உள்ள மாபெரும் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலானவை மேலே கூறப்பட்ட மூன்று உச்சதளங்களைப் பற்றியவை என்று.
இவற்றை நான் ‘முறிவுக்கணங்கள்’ என்று கூறுகிறேன். நம்முன் நம்மைத் தாங்கி நின்ற சில சட்டங்கள் முறியும் கணங்கள் இவை. நாம் ஏறி நின்ற பீடங்கள் முறியும் கணங்கள் என்றும் கூறலாம். நம்மைச் சூழ்ந்திருந்த அனைத்தும் சடசடவென்று சரிந்து உடைந்து நொறுங்கிவிழுகின்றன அப்போது. சார்லி சாப்ளின் ஒரு பெரிய மரக்கட்டடத்திற்குள் நுழைவார். ஏதோ ஒரு உத்தரம் நீட்டிக்கொண்டிருக்கும். ஒரு ஆர்வத்தால் அதைப்பிடித்து இழுப்பார். சரசரவென மொத்த கட்டடமும் இடிந்து சரிந்து சூழ்ந்து விழுந்து கிடக்கும். அதைப் போன்ற ஒரு தருணம். நம்மில் ‘ஏன்? எதற்காக?’ என்ற வினாக்கள் மட்டுமே எஞ்சி இருக்கும். நம் இருப்பே அந்த அடிவயிற்று வேசமாக மட்டும் இருக்கும்.
இந்த உச்சத்தில் இரு பாதைகள் பிரிகின்றன. பெரிய பாதை, வழக்கமான பாதை, கோடானுகோடி பாதங்கள் பதிந்த பாதை, ‘நம்பிக்கையின் பாதை’ அது. பரிபூரண சரணாகதியின் வழி. ‘இல்லை, இந்த வினாக்களை நான் தாளமாட்டேன். இவற்றுக்கான பதில் எனக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இதோ அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு நிர்வாணமாக சரணடைகிறேன்’ என்று குப்புற விழும் முறை அது. மேலே சொன்ன முறிதல் கணத்திற்குப் பிறகு, நாம் சந்திக்கும் ஏறத்தாழ அனைவருமே இந்தப் பாதையையே தெரிவு செய்திருப்பார்கள். இது எளியது, நன்றாக வழிகாட்டிக் குறிப்புகள் பதிக்கப்பட்டது. அனைத்துக்கும் மேலாக நமக்கு வழித்துணைகளும் பலர் அகப்படுவர்.
இன்னொரு பாதை உண்டு. அது எவ்வளவு தூரம் முயன்றாலும் முதல் பாதையை தேர்வு செய்ய முடியாத சிலர் உண்டல்லாவா, அவர்களுக்கானது. இவர்களில் பலர் முதல்பாதையைத் தெரிவு செய்து சற்றுதூரம் போய்விட்டு முடியாமல் திரும்பி ஓடிவந்தவர்கள். இவர்களுக்கு இந்தப்பாதையில் முன்னகர்வது தவிர வேறு வழியே இல்லை. இந்தப்பாதையை ‘தேடலின் பாதை’ என்கிறேன். கீதா முகூர்த்தம் என்பது தேடலின் பாதையில் ஒருவன் அடையும் மிக முக்கியமான ஓர் இடம்.
இருபது வருடங்களுக்கும் மேலாக பலவகை மதநூல்களையும் ஆ ர்வத்துடன் கற்றவன் என்ற முறையில் இங்கே ஒன்றைக் கூறவிரும்புகிறேன். இந்துமதம், புத்தமதம், தாவோ, கன்பூஷியம் போன்ற சில மதங்களில் மட்டுமே இந்த இரண்டாவது பாதை திறந்திருக்கிறது. காரணம் இவை தத்துவார்த்த மதங்களும் கூட. பிறமதங்களில் இரண்டாவது பாதை இருளுக்கு இட்டுச் செல்லும் தன்னகங்காரத்தின் பாதையாகவே அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நம்பிக்கை மட்டுமே மீட்பு என்று கூறும் அம்மதங்கள் ஐயத்தை நரகம் என்றே குறிப்பிடுகின்றன.
ஆனால் கீதா முகூர்த்தம் என்பது முடிவில்லாத ஐயங்கள் ஒன்றாகத்திரண்டு கனத்து நம்மை அசைவிழக்கச் செய்யும் ஒரு தருணம் ஆகும். கீதையில் அர்ச்சுனனை அந்நிலையில்தான் நாம் காண்கிறோம்!
*
ஒருமுறை உறையாடும்போது நித்ய சைதன்ய யதி கூறினார், ”இருண்ட வான்வெளியில் உள்ள கருமை என்பது நம் வினாக்கள். நட்சத்திரங்கள் என்பவை எளிய பலவீனமான உதிரி விடைகள்! கீதாசாரியனை கன்னங்கரியுருவாக உருவகித்தார்கள் முதாதையர். அவனுடைய சொற்கள் விண்மீன்கள் போலும்!”
முறிதலின் கணங்களை பின்னர் மனதில் மீட்டிப்பார்க்கும்போது அவற்றுக்கு இடையே பொதுவான ஒரு இயல்பு கண்ணுக்குப் படுகிறது. ஆனால் இதற்கு நீண்ட காலம் தாண்ட வேண்டும். அந்தக் கணங்கள்மீது நமக்கிருந்த உணர்ச்சிபூர்வமான தொடர்பு மழுங்கி விட்டிருக்க வேண்டும். அப்போது தெரியும், தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து முறிவுக்கணங்களின் இயல்புகளில் எத்தனையோ வேறுபாடுகள் இருப்பினும் அவை அடிப்படையில் ஒன்றுதான் என்று.
மரணம் ஏன் நம்மை உடைத்து நொறுக்குகிறது? நம் அன்றாட வாழ்வின் சிந்தனைகளால் விளக்க முடியாத ஒரு பிரம்மாண்டமான புதிர் அது. நம் வாழ்வில் நடக்கும் ஒரு பெரிய சரிவானது இப்பிரபஞ்சம் எத்தனை பெரிய சங்கிலித்தொடர் என்று நமக்கு காட்டுகிறது. அதில் ஒரு சின்னஞ்சிறு கண்ணியை மட்டும் நம் வாழ்வாகக் கொண்டுள்ள நாம் அதை நம் செயல்கள் மூலம் நிகழ்த்துவதாக எண்ணிக் கொள்வதன் சிறுமையை அப்போது கண்டடைகிறோம். அதே போன்றதே உறவும். மனிதமனம் என்பது எத்தனை பெரிய புதிர்வெளி என்று அப்போது நாம் அறிகிறோம்.
மலைத்தொடர் ஒன்றில் வாழும் எலும்பு ஒன்று ஒரு விசித்திரத்தால் மொத்த மலையையும் உள்வாங்கிக் கொள்ள முடிந்தால் அதற்கு ஏற்படும் சிறுமையும் திகைப்பும்தான் இந்த முறிவுக் கணம் என்று கூறலாம். நம் வாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறு துளியைச் சூழ்ந்து இயங்கும் மாபெரும் பெருவெளியை நாம் அப்போது உணர்கிறோம். அந்நிலையில் இந்த துளிக்குள் செல்லுபடியாகும் படியாக நாம் உருவாக்கி வைத்துள்ள தர்க்க அமைப்புகள், நியாய வாதங்கள் அனைத்துமே பொருளழிந்து போகின்றன. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் பிரபஞ்சத்தின் இயங்கு விதிகளோடு பொருத்திப்பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்போது நம் புத்தி பேதலித்துவிடுகிறது.
என் சிறு வயதில் பார்த்த ஓர் அனுபவம். எழுபதுகளின் தொடக்கத்தில் கேரளத்திலும் குமரி மாவட்டதிலும் ‘கொக்கோ’ பயிர் அறிமுகமாகியது. காட்பரீஸ் நிறுவனம் கொக்கோ விலையை உயர்த்தியது. மேலும் மேலும் கொக்கோவுக்கான தேவை உருவாயிற்று. காரணம் அவர்கள் சர்வதேச அளவில் கொக்கோ கொள்முதல் செய்த இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிகள். என் அண்டைவீட்டு கேசுமாமா அவரது நாலரை ஏக்கரிலும் தென்னகளை அழித்து கோக்கோ நட்டார். இரவு பகல் உழைத்து தண்ணீர் பாய்ச்சினார். நான்கு வருடம் கழித்து கொக்கோ காய்த்தபோது இலத்தீன் அமெரிக்க நிலை சீரடைந்தது. கொக்கோவுக்கு விலையே இல்லாமலாயிற்று. வளர்ந்து நின்ற மரங்களைப் பார்த்து கேசுமாமா ஏங்கினார். இரவு பகலாக காண்பவர்களிடமெல்லாம் விசாரித்தார். ஒருநாள் எல்லா கொக்கோக்களையும் வெட்டி வீசினார். மறுநாள் முதல் தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தார். பதினாறு வருடம் பைத்தியமாக இருந்து இறந்தார்.
உழைப்பு, அதற்கேற்ப பலன் தரக்கூடிய ஓர் எளிய உலகம்தான் கேசுமாமா வாழ்ந்து வந்தது. அதில் சர்வதேச அரசியலும் பொருளாதாரமும் புகுந்தபோது அவரால் அதை உள்வாங்கவே முடியவில்லை. அதை புரிந்து கொள்ளும் தாக்கம் அவரிடம் இல்லை. அவருடைய கருவிகள் அதை எதிர்கொண்டபோது முறிந்து போயின.
ஆமாம், நாம் இன்னும் பெரிய வெளி ஒன்றை எதிர்கொள்ள நேர்வதையே முறிவுக்களம் என்கிறோம். சமீபத்தில் என் வாசகர் ஒருவரின் அம்மா தற்கொலை செய்து கொண்டார், அவரது அண்ணா ஓர் ஒரினச்சேர்க்கையாளர் என்று அம்மாவுக்குத் தெரியவந்ததே காரணம். பலவிதமான வாழ்க்கைக¨ளைக் கண்ட அம்மாவால் அதை உள்வாங்க இயலவில்லை.
முறிவுக்கணத்தில் கேள்விகள் தீப்பட்ட மத்தாப்பிலிருந்து பொறிகள் கிளம்புவதுபோல பொங்கியெழுகின்றன. பல வருடங்களாக நான் அழுகைகளை, ஒப்பாரிகளை கேட்டு வருகிறேன். அனைத்தும் வெறும் கேள்விகள்தான். ‘என்னை எப்படி விட்டுப் போனீர்கள்? எப்படி மனம் வந்தது? இனி நான் என்ன செய்வேன்? என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இனி எதை நம்பி வாழ்வது? ஏன் இப்படி நடக்கிரது?’ நம்பிக்கையின் பாதை இந்த அனைத்துக் கேள்விகளையும் ஒரே பதிலால் மூடிப்போர்த்தி விடுகிறது. ‘எல்லாம் இறைவனின் சித்தம். நாம் அதை அறியமுடியாது.’ அவ்வளவுதான். நம்பு, சரணடை மேலே யோசிக்காதே. போதும். அது ஒரு சிறந்த வழிதான். இந்து மதம் ஒவ்வொருவருக்கும் உடனடியாக அளிக்கும் மருந்து அதுவே ‘விதி’, ‘கர்ம வினை’, ‘இறைவன் லீலை’ என்று இந்துமதம் கூறும் பதில்கள் எத்தனை! இந்த மருத்துக்குக் குணமாகாதவர்களுக்குத்தான் அடுத்த பாதை.
தேடலின் பாதையிலும் பல படிநிலைகள் உண்டு. முதல்படிநிலை நம்முடைய தன்முனைப்பு ஓங்கி நிற்கும் காலகட்டமாகும். ‘நான் பிறரில் இருந்து வேறுபட்டவன். ஒருபோதும் எளிய விடைகளால் ஆறுதல் அடையமாட்டேன். என்னுடைய தருக்க மனதிற்கும் உள்ளுணர்வுக்கும் முற்றிலும் திருப்திகரமான பதிலே எனக்குத் தேவை. அப்பதிலை பரிசீலித்து உண்மையை அறிந்து கொள்ளும் திராணி எனக்கு உண்டு’ என்ற எண்ணம் நம்முன் நிறைந்துள்ளது.
இந்நிலையில் நின்றபடி நாம் வாசிக்கும் நூல்கள் பெரும்பாலும் நம்முடைய தம்முனைப்பை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. சொல்லப்போனால், அதிகமாக வாசிக்கும்தோறும் தன்முனைப்பு அதிகரிக்கிறது. ‘அறிவார்ந்த’ விவாதங்களில் நாம் மீண்டும் மீண்டும் காண்பது தன்முனைப்பின் குரலையே. ‘என் கருத்தே நான். என் கருத்து மறுக்கப்படுவது என்னை நிராகரிப்பதாகும்’ என்ற எண்ணம் மூலம் உருவாகும் பதற்றமே ஏராளமான சொற்களாக மாறி விவாத அரங்குகளை நிறைக்கிறது. ‘ஒரு கருத்து என்னுள் உதித்தது என்பதனாலேயே அது என் உண்மை, அது என்னால் நிறுவப்பட வேண்டும்’ என்று எண்ணுவதே அறிவியக்கத்தில் இந்நிலையில் உள்ள மாபெரும் மாயை.
கீதா முகூர்த்தம் என்பது இந்த தன்னகங்காரத்தின் முறிவுநிலையே என்று கூறலாம். அலைஅலையாகக் கிளம்பும் நம் கேள்விகள் அனைத்தும் ‘நான்’ எனும் போதத்தை ஊற்றுக்கண்களாகக் கொண்டவை. அந்த போதம் மீது அடிவிழுந்து அது சுருண்டு கொள்ளும்போது நம் வினாக்களும் அர்த்தமிழந்து திகைத்து நிற்கின்றன. ‘தெரிந்து ஒன்றும் ஆகப்போவதில்லை’ என்றோ ‘தெரிந்து கொள்ளுதல் என்பதே வெறும் மனப்பிரமை’ என்றோ தோன்றிவிடும் ஒரு நிலை இது.வாழ்நாளெல்லாம் ஆவேசத்துடன் அறிவியக்கங்களில் ஈடுபடுபவர்கள் திடீரென்று இந்நிலையை அடைந்து மெளனமாகிவிட்டிருப்பதை நாம் அடிக்கடி காண்கிறோம். ஆயிரக்கணக்காக நூல்களை வாசித்தவர்கள், வருடக்கணக்காக விவாதித்தவர்கள் அதுவரை செய்த அனைத்தையுமே நிராகரித்துவிட்டு அமர்ந்திருப்பார்கள்.வயதினாலும் குடும்பச்சுமையாலும் உருவாகும் சலிப்பை இங்கு குறிப்பிடவில்லை. திடீரென்று ஓர் அர்த்தமின்னையை உணர்ந்து அடையும் மெளனத்தையே குறிப்பிடுகிறேன். இந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள நேரும் ஒருவகை உச்சகட்டமே கீதாமுகூர்த்தம் என்பது.
கீதை இன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் ஒரு நூல் என்ற முறையில் எவரும் எப்போதும் படிக்கலாம். கீதைக்கான உரைகள் பற்பல. னால் கீதாமுகூர்த்ததில் நிற்பவனே கீதையை முற்றாக உணரமுடியும். அந்தத் தருணத்துடன் தன்னை அடையாளம் காணமுடியுமென்றால் மட்டுமே கீதையை சற்றேனும் உள்வாங்கிக் கொள்ள முடியும். பிறர் கீதையினூடாக தங்கள் ஐயங்களைப் பெருக்கிக் கொள்ளலாம். தங்கள் அகங்காரங்களை மேலும் கெட்டிப்படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான்.
Wednesday, 3 December 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment